Home செய்திகள் தேசிய செய்திகள் மருந்து விலை நிர்ணயத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

மருந்து விலை நிர்ணயத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி, அக். 28-
மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலைக்கும், சில்லரை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யும் விலைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் மருந்து உற்பத்தியாளர்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையின்போது, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையில் வணிக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்திருந்தது. அந்தப் பதில் திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பிற மருந்துகளுக்கும் இதேபோன்ற லாப வரம்பை ஏன் நிர்ணயிக்க முடியாது எனக் கேள்வி எழுப்பினர். புற்றுநோய் மருந்துகளின் வணிக லாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் முடிவால், நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மிச்சமாகும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. மீண்டும் நடந்த விசாரணையின்போது, மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலைக்கும், மருந்துக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். “மருந்து உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் செயலற்ற அமைப்பாகத் தோன்றுகிறது. அரசின் கண் எதிரிலேயே இது நடக்கும்போது, எப்படி அனுமதிக்கலாம்?” என அவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, உலகிலேயே இந்தியாவில்தான் மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன என்றார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.