
லிங்கன், அக். 28-
இந்தியா ‘ஏ’, நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லிங்கன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 113 ரன்களிலும், நியூஸிலாந்து ‘ஏ’ அணி 317 ரன்களிலும் ஆட்டமிழந்தன. 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி, 3-வது நாள் ஆட்ட முடிவில் 119 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 488 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 199 ரன்களும், சாய் சுதர்சன் 91 ரன்களும், யாஷ் ரத்தோடு 66 ரன்களும் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி, 123.1 ஓவர்களில் 516 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களிலும், முகேஷ் சவுத்ரி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆகாஷ் தீப் 25 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 313 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து ‘ஏ’ அணி, 65 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், கர்டிஸ் ஹாப்பி 90 ரன்களுடனும், ஜெய்டன் லெனாக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்னும் 17 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், வானிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போட்டியைத் தொடர முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் அகிப் நபி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 31-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
















