
ஜெய்ப்பூர், அக். 28-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.20 மதிப்பிலான கச்சோரி சாப்பிடுவதற்காக ஸ்கூட்டரை நிறுத்திய தொழிலதிபரின் பையில் இருந்த ரூ.20 லட்சம் பணத்தை, ஸ்கூட்டரில் வந்த இருவர் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. சம்பாலால் என்ற தொழிலதிபர் கச்சோரி சாப்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரை நிறுத்தினார். அப்போது, ரூ.20 லட்சம் பணம் வைத்திருந்த பையை ஸ்கூட்டரின் முன்புறத்தில் வைத்துவிட்டு, வாகனத்தில் அமர்ந்தபடியே கச்சோரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் மற்றொரு ஸ்கூட்டரில் இருவர் சம்பாலாலுக்கு அருகில் வந்து நிறுத்தினர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர், ஸ்கூட்டரின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பணப் பையை விரைவாகப் பறித்துக்கொண்டார். பின்னர் இருவரும் ஸ்கூட்டரில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.பணம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பாலால், கையில் கச்சோரி வைத்திருந்தபடியே திருடர்களைப் பிடிக்க ஓடினார். எனினும், அவரால் இருவரையும் பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.காட்சிகளில், சம்பாலால் தனது ஸ்கூட்டரில் அமர்ந்து கச்சோரி சாப்பிடுவது தெரிகிறது. அப்போது மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இருவர் அவருக்கு அருகில் நிற்கின்றனர். பின்னால் அமர்ந்திருந்த நபர், பணம் இருந்த பையை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது.தலைக்கவசம் அணிந்திருந்த இருவரையும் அடையாளம் காண்பதற்காக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பாலால் அளித்த புகாரின் அடிப்படையில், நஹர்கர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













