
தேனி: அக். 28-
தேனி மாவட்ட சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். எஞ்சிய 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக முதன்மை தலைமை வார்டன் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இச்சிறையில் 4 பிளாக்குகளில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், 3-வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாரா காவலர் ஸ்டாலின் பிரபு, பிளாக்கின் கதவைத் திறந்து உள்ளே சென்றார்.
முத்து இளங்கோவனுக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்ததால், கைதிகள் கூறியதை காவலர் நம்பியதாகக் கூறப்படுகிறது. அவர் உள்ளே சென்றதும், திட்டமிட்டிருந்த கைதிகள் போர்வையைப் போர்த்தி அவரைச் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த காவலர் நிலைகுலைந்து விழுந்தார்.
இதையடுத்து 17 கைதிகளும் பிளாக்கிலிருந்து வெளியேறி, மேலும் 3 காவலர்களையும் தாக்கிவிட்டு அருகிலிருந்த வனப்பகுதிக்குள் தப்பியோடினர். தகவலறிந்த போலீஸார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறையைச் சுற்றியுள்ள 10 கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களுடன் வாகனங்கள் சோதனையிடப்பட்டன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கைதிகளின் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களும் கண்காணிக்கப்பட்டன.













