Home செய்திகள் தேசிய செய்திகள் மருத்துவ மாணவர்களின் கிராமப்புற சேவைக்கு நெறிமுறைகள்

மருத்துவ மாணவர்களின் கிராமப்புற சேவைக்கு நெறிமுறைகள்

புதுடெல்லி, அக். 28-
நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கட்டாயமாக கிராமப்புற சேவை புரிவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு பெற, மருத்துவ மாணவர்கள் ஓராண்டு கட்டாயப் பொது கிராமப்புறச் சேவையை நிறைவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி ஆஜராகி, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கட்டாயப் பணி அவசியமாக உள்ளது என்றும், இளநிலை மருத்துவப் படிப்பில் அது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், இது தொடர்பாக மாநிலங்களே உத்தரவு பிறப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு மற்றும் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளின் அடிப்படையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கலாம் என்று பரிந்துரைத்தார்.