
காங்கோ: அக். 28-
காங்கோ குடியரசில் எபோலா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 10,000 பேரில் இதுவரை 4,887 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் முதல் காங்கோவில் பரவி வரும் இந்த அரிதான எபோலா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக அங்கு பரவி வரும் ‘Bundibugyo’ வகை எபோலா வைரஸ் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ வரலாற்றில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான எபோலா பாதிப்பாக இது கருதப்படுகிறது. உலக அளவில் 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா தொற்றுக்குப் பிறகு, இதுவே இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பு என சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காங்கோவில் பரவி வரும் இந்தத் தொற்று கென்யா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காங்கோவில் பரவி வரும் அரிதான புண்டிபுக்யோ எபோலா வைரஸ் வகைக்கென அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை இல்லை. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புனியா நகரில் ‘TUMAINI’ என்ற பெயரில் எபோலா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி மற்றும் சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில், இந்த மருத்துவப் பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.













