
புதுடில்லி, அக். 28-
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாட்டு மக்களிடம் காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். பீஹாரைச் சேர்ந்த ரிது சவுத்ரி, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் இரண்டு வீடியோக்களை வெளியிட்டார். அதில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், சீன ராணுவ ஊடுருவல் குறித்து ‘ஸ்பியர் கார்ப்ஸ்’ படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போன்ற ‘மார்பிங்’ செய்யப்பட்ட வீடியோவும் பகிரப்பட்டது.
இந்நிலையில், ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ரிது சவுத்ரி பகிர்ந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், அவை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிக்கிமில் உள்ள நாது லா கணவாய், இந்தியா–சீனா இடையே அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லை வர்த்தகப் பகுதி எனவும், அங்கு வழக்கமாகச் செல்லும் வணிக வாகனங்களின் காட்சிகள் சீன ராணுவ ஊடுருவலாக தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியது. கிரிஷ் காலியா பேசுவது போல வெளியான மற்றொரு வீடியோவும் போலியானது என ராணுவம் தெரிவித்தது. அந்த வீடியோ 2023 அக்டோபரில், ஜம்மு–காஷ்மீரின் குப்வாரா மாவட்ட எல்லைப் பகுதியில் நடைபெற்ற ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் அளித்த பேட்டியாகும். அதில் அருணாச்சலப் பிரதேசம் அல்லது வீரர்களுக்கான தளவாடங்கள் மறுக்கப்படுவது குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரிஜிஜு கூறுகையில், ராணுவத்தின் பெருமையை சீர்குலைக்கும் போலி வீடியோக்களை காங்கிரஸ் பரப்பியுள்ளது. இது அப்பட்டமான துரோகச் செயல் என்றும், எதிரிகளின் சதிக்கு இணையானது என்றும் அவர் தெரிவித்தார். பா.ஜ. செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், இது காங்கிரசின் ராணுவ எதிர்ப்பு மனநிலையை நிரூபிப்பதாகக் கூறினார்.













