
புதுடெல்லி: அக். 28-
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் முதன்முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நவம்பர் 20-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கடந்த 20-ந்தேதி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இந்த ஆண்டு இறுதியில் முதன்முறையாக நடைபெற உள்ள நாகரிகப் பேச்சுவார்த்தை கருத்தரங்கில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அந்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பலதரப்பு நாடுகள் பங்கேற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அழைப்புக்கும், பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, பாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய மற்றும் கலாசார மந்திரி அவுரங்கசீப் கான் கிச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொண்டது.
அதன்பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படக்கூடிய பதற்றநிலை உருவானது. இதையடுத்து, மே 7-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கவுன்சில் தலைவர்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் பாதுகாப்பு மந்திரியுமான இஷாக் தார் முன்னிலையில் ராஜ்நாத் சிங் பேசினார். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும், அதில் இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் பாகிஸ்தானை நேரடியாக விமர்சித்தார்.













