Home செய்திகள் தேசிய செய்திகள் ஆந்திராவில் அர்னாப் புயல்; அதி கனமழை

ஆந்திராவில் அர்னாப் புயல்; அதி கனமழை

அமராவதி: அக். 28-
வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நரசாபூர் அருகிலும், பாபட்லா–விசாகப்பட்டினம் இடையிலான கடல் பகுதியிலும் புயலின் மையப்பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் முழுமையான செயல்முறை அடுத்த சில மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் மையப்பகுதியில் மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 150 கிலோமீட்டர் வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கடந்த மூன்று மணி நேரத்தில் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தொடர்ந்து மெதுவாக வடமேற்கு மற்றும் வட-வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோனசீமா, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அனகாபள்ளி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பல இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான அதிகனமழை பதிவாகியுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது, வழக்கமான கடல் அலை உயரத்தைவிட 1.5 முதல் 2.5 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும். இதனால் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடா, ஏனாம் பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்கள் சரிந்தும் போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 22 விமானங்கள், பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆந்திராவின் பல மாவட்டங்களில் 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 85 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்கும் வரை கனமழையும் பலத்த காற்றும் தொடரும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.