
பெங்களூர், அக். 28-
கர்நாடக சட்ட மேலவையின் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி, வரும் 2028 சட்டசபை தேர்தலுக்கு வாக்காளர்கள் கொடுத்துள்ள தெளிவான திசைகாட்டி என்றும், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழல் நிர்வாகத்திற்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடி என்றும் கர்நாடக பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.மேலும், இவிஎம் இயந்திரத்தை குறை கூறி வந்த ராகுல் காந்தி தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகக் கூறிய அவர், வெற்றி பெற்ற கே.எம்.சுரேஷ், எஸ்.வி.சங்கனூர், சஷில் ஜி.நமோஷி, ஏ.பி.ரங்கநாத் ஆகியோருக்கும் உழைத்த தொண்டர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.













