
டெல்லி: நவ.4-
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும், எதிர்காலத்திலும் அத்தகைய இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்தார்.
டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “இந்தியா இதுவரை எந்தவொரு மரபணு மாற்றப்பட்ட பொருட்களையும் இறக்குமதி செய்ய அனுமதித்ததில்லை. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், எதிர்காலத்திலும் இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பால் பண்ணைத் துறை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இதுவரை செய்யப்பட்ட எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தத் துறைக்கு இந்தியா வரிச் சலுகைகளை வழங்கியதில்லை. வெளிநாடுகளில் பால் பொருட்கள் தயாரிக்கும்போது கன்றுக்குட்டி இறைச்சி அல்லது ரென்னெட் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மத உணர்வுகளைப் பாதிக்காத வகையில், இத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டு, கடுமையான சான்றிதழ் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை இறுதி செய்யப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களில் விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்களில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் பியூஷ் கோயல் கூறினார். ஜவுளி, மருந்து, விவசாயப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சந்தை வாய்ப்புகளைப் பெற அரசு தொடர்ந்து முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.













