
ஜெய்சால்மர், நவ. 4-
2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவப் படைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அவர், தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ராணுவத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகக் கூறினார். 2026-27 நிதியாண்டுக்கான பாதுகாப்புத் துறை பட்ஜெட் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7.85 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதுடன், ரூ.50,000 கோடி மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நவீன போர் முறைகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேம்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அசானி (Asani), பைரவ் (Bhairav), சக்திபன் (Shaktiban) உள்ளிட்ட படைப்பிரிவுகள், தற்போதைய ராணுவ நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.















