
டில்லி, நவ. 4-
தீபாவளி பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களால் ரூ.14,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு, போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மீண்டும் போராட்டம் நடைபெற்றால் வர்த்தகர்கள் கடைகளை மூடி, அவற்றின் சாவிகளை போராட்ட அமைப்பாளர்களிடமே ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும். ‘இண்டி’ கூட்டணி நடத்திய போராட்டத்தால் 2.50 லட்சம் கடைகள் மூடப்பட்டன. இதனால் சில்லரை மற்றும் மொத்த வர்த்தகத்தில் ரூ.8,800 கோடி இழப்பு ஏற்பட்டது. சரக்கு வாகனங்கள் இயங்காததால் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல், சுற்றுலா மற்றும் உணவகத் துறைகளுக்கு ரூ.500 கோடி அளவுக்கும், தினக்கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அக்டோபரில் நடைபெற்ற போராட்டங்களால் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, டில்லியில் நடத்தப்படும் போராட்டங்களுக்கான இடங்களை புறநகர் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்று டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.















