
பெங்களூரு, நவ. 4-
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (சின்சிபி) காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவின் (சின்சிபி) ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப்பிரிவு (மேற்கு) காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முதல் சம்பவத்தில், ஞானபாரதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்ற வழக்கில் தொடர்புடையவரும், அதே காவல் நிலையத்தின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ளவருமான இம்ரான் பாஷா எலியாஸ் இம்மு (வயது 28) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நீதிமன்றம் உத்தரவிட்ட விசாரணை தேதிகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், அவருக்கு எதிராக பிணையில் வர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 3-ஆம் தேதி சின்சிபி அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தி இம்ரான் பாஷாவை கைது செய்து, விசாரணைக்குப் பிறகு மேல் நடவடிக்கைக்காக ஞானபாரதி காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவத்தில், ராஜகோபாலநகர் காவல் நிலைய ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள ஹரீஷ் எலியாஸ் நாரிமரி (வயது 28) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது பெங்களூரு நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜகோபாலநகர் காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஒன்றரை ஆண்டாக இவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து நீதிமன்றம் இவருக்கு எதிராகவும் பிணையில் வர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்திருந்தது. கடந்த 3-ஆம் தேதி சின்சிபி காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஹரீஷ் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ராஜகோபாலநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.













