Home செய்திகள் உலக செய்திகள் வங்கி முடக்கம்: பராகுவே அதிபர் ராஜினாமா

வங்கி முடக்கம்: பராகுவே அதிபர் ராஜினாமா

அசுன்சியான்: நவ.6-
பராகுவே நாட்டின் டிஜிட்டல் வங்கியான யுயேனோ திடீரென முடங்கியதால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிபர் சான்டியாகோ பென்யா வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.சுமார் 65 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பராகுவேயில், யுயேனோ வங்கியின் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் தவித்து வருகின்றனர். வங்கியின் குறைந்தபட்ச நிதித் தாங்குதிறனில் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, பராகுவே மத்திய வங்கி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்த யுயேனோ வங்கி, சுமார் 850 மில்லியன் அமெரிக்க டாலர் பொது நிதியைக் கையாண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வங்கி முடங்கிய விவகாரத்தில், அதிபர் சான்டியாகோ பென்யா மீது ஓய்வூதிய நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அதிகாரபூர்வத் தகவல்களை மறைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இதையடுத்து, அதிபரைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதற்கிடையில், மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், ஆளும் கட்சியினரின் ஆதரவையும் சான்டியாகோ பென்யா இழந்தார். “நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் நமது ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை திரும்பக் கிடைக்க வேண்டும்; டெபாசிட் உத்தரவாத நிதி தனது கடமையைச் செய்ய வேண்டும்; அனைத்துப் பராகுவே மக்களுக்குமான பொது நிதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை விருப்பம்.”
சான்டியாகோ பென்யாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பராகுவேயின் புதிய அதிபராக துணை அதிபர் பெட்ரோ அலியானா பொறுப்பேற்க உள்ளார்.