Home மாவட்டங்கள் சென்னை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: நவ.6- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து, நேற்று மாலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியை எட்டியது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது.நீர்வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியதுடன், காவிரி ஆற்றிலும் நீரோட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை, தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், பரிசல் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளது.