
ஓசூர், நவ. 6-
ஹோசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் சென்ட்ரிங் சரிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் புதிய கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று கட்டிடத்தின் மேல்தளத்தில் தொழிலாளர்கள் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது, கான்கிரீட்டிற்கு ஆதாரமாக அமைக்கப்பட்டிருந்த மரச் சட்டங்கள் (சென்ட்ரிங்) எதிர்பாராதவிதமாக திடீரென பலத்த சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது. இதில் கான்கிரீட் கலவை மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கி அலறினர்.இந்த கோர விபத்தில் குமரசன் (வயது 39), மைக்கேல் (26), சீனிவாசன் (26) ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













