
திருவனந்தபுரம்: நவ.7-
சபரிமலையில் நடைபெற உள்ள மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள வருவாய்த் துறை மந்திரி அனில் குமார் தெரிவித்தார்.
சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், சீசனை முன்னிட்டு சபரிமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வருவாய்த் துறை மந்திரி அனில் குமார் தலைமையில் நேற்று பம்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேவஸ்தானத் தலைவர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி அனில் குமார் கூறியதாவது: நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் அய்யப்ப பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், sabariportaldcpta.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை செல்போன் மற்றும் கணினி மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம்.
இதனுடன், வாட்ஸ்அப் சாட்போட் உள்ளிட்ட வசதிகளும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சபரிமலை தொடர்பான தகவல்களை பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள், தவறவிடப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை இந்த புதிய இணையதளத்தில் புகாராகப் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
















