Home மாவட்டங்கள் சென்னை பெரியார் பெயரில் திமுக ஊழல்: முதல்வர் குற்றச்சாட்டு

பெரியார் பெயரில் திமுக ஊழல்: முதல்வர் குற்றச்சாட்டு

சென்னை: நவ. 7-
கோவையில் பெரியார் நூலகம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.300 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் இந்த நூலகத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 13-ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட கட்டுரையில், “போலி பதிப்பகம், போலி சர்வதேச தர புத்தக எண்கள்கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதிலும் அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள்தான் அதிகமாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘கோவை பெரியார் அறிவுலக நூல்கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் செய்துள்ள திமுகவை தமிழகத்தின் வருங்காலத் தலைமுறை மன்னிக்காது’ என்று முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள் தான். தமிழ் மொழியை கண்டுபிடித்ததே நாங்கள்தான். தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான். தமிழ் இலக்கிய கடலை எங்கள் சட்டைப்பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான். தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுகதான் என்பது ஊரறிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் மே 5-ம் தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலகத்துக்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்ட வேண்டும்.
நாங்கள் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது திமுகதான் என்று பகிரங்கமாக எங்களது மாநாட்
டிலேயே அறிவித்தோம். எப்போதும் திமுக பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதை திமுகவே மெய்ப்பித்துள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. திமுக கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவைபெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் என்பதும் தெரியவந்துள்ளது.