Home செய்திகள் உலக செய்திகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் காசாவாகிவிட்டது: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் காசாவாகிவிட்டது: பொதுமக்கள் குற்றச்சாட்டு

முசாபராபாத்: நவ. 7-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய காஷ்மீரில் இருந்து குடியேறியவர்களுக்கு 53 தொகுதிகளில் 12 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும், மின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும், ஒருங்கிணைந்த அவாமி செயல் குழுவின் மூத்த தலைவர்களும் கூறியதாவது: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி நரகமாக மாறியுள்ளது. தற்போது பாகிஸ்தான் ராணுவமும், இஸ்ரேல் ராணுவத்தின் பாணியில் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி காசாவாக மாறியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.