
வாசிங்டன்: நவ. 7-
இந்திய சமூகத்தினருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீபாவளி கொண்டாடினார். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் பிரதான பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். வெள்ளை மாளிகை வளாகத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில் டிரம்ப் குத்துவிளக்கை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் GOQii சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கோண்டல்,
நட்சத்திர சமையல் கலைஞர் விகாஸ் கன்னா, கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபி தல்லா உள்ளிட்ட பல முக்கிய இந்திய வம்சாவளிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற இந்திய சமூகத்தினர், அதிபர் டிரம்ப்புக்கு அனுமன் சாலிசா பிரதியைப் பரிசாக வழங்கினர். அந்தப் பிரதியை டிரம்ப்புக்கு வழங்கியதில் பெருமைப்படுவதாக விஷால் கோண்டல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஓவல் அலுவலகத்தில் ஒரு கூட்டு மகிழ்ச்சித் தருணம். அதிபர் டொனால்ட் டிரம்புடன் தீபாவளியைக் கொண்டாடியது ஒரு கௌரவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.













