Home மாவட்டங்கள் பெங்களூர் இளம்பெண்ணை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ய முயற்சி: வாலிபர் கைது

இளம்பெண்ணை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ய முயற்சி: வாலிபர் கைது

ஹாசன், நவ. 7-
கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்த இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று பிசிலே காட் வனப்பகுதியில் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக கடபா தாலுகா கொணாஜே கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், கைதான பிரசாத்தும் கடந்த 3 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை, பிரசாத் அந்த இளம்பெண்ணை உப்பின்னங்காடியிலிருந்து தனது காரில் ஏற்றிக் கொண்டு குல்குந்தா வழியாக பிசிலே காட் பாதைக்குச் சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் காட்டின் ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்குச் சென்றதும், இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கில் பிரசாத் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இளம்பெண் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய பிரசாத் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மறுநாள் 5-ந் தேதி காலையில் இளம்பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து சுப்ரமண்யாவுக்கு வந்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் சுப்ரமண்யா போலீஸ் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சுப்ரமண்யா போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவுகள் 118(1) மற்றும் 109(1)-ன்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் நடந்த இடம் ஹாசன் மாவட்டம் எசளூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், மேல் விசாரணை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எசளூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே தலைமறைவாக இருந்த பிரசாத்தை சுப்ரமண்யா போலீசார் பிடித்து எசளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அடர்ந்த பிசிலே காட் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எசளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.