Home தலைப்பு செய்தி பெட்ரோலில் அதிக எத்தனால் இல்லை

பெட்ரோலில் அதிக எத்தனால் இல்லை

பெங்களூரு, நவ. 7-
கர்நாடக மாநிலத்தின் சில பெட்ரோல் பங்குகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எத்தனால் கலக்கப்பட்டு உள்ளது. சில மாதிரிகளில் எத்தனால் அளவு 31.2 சதவீதம் வரை பதிவாகி உள்ளது என்று கர்நாடக அரசு கூறிய குற்றச்சாட்டை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
மாநில அரசு நடத்திய சோதனைகள் சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதனால் சோதனை அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாக நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.) ஆகிய நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாநில அரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளன.
மாநில உணவு, பொதுமக்கள் விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் சட்ட அளவீட்டுத் துறை வெளியிட்டுள்ள தகவலை நாங்கள் கவனித்துள்ளோம். சில பெட்ரோல் பங்குகளில் 26 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்டு உள்ளது என்ற அறிக்கைகள் முறையான சோதனை முறையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாநில உணவு மற்றும் பொதுமக்கள் விநியோகத் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி, பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட 20 சதவீத வரம்பை விட அதிக அளவில் எத்தனால் கலக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
பெங்களூரு, கோலார், சிக்பள்ளாபூர், பெங்களூரு கிராமப்புறம், ராமநகரம், மங்களூரு மற்றும் துமகூரு மாவட்டங்களின் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. சில மாதிரிகளில் எத்தனால் அளவு 31.2 சதவீதம் வரை கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அரசு வலியுறுத்தியிருந்தது.
செப்டம்பர் சோதனைக்கும் அக்டோபர் சோதனைக்கும் வித்தியாசம்: இதற்கு பதிலளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், நாடு முழுவதும் மற்றும் கர்நாடகாவிலும் விநியோகிக்கப்படும் ஈ20 பெட்ரோல் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (பி.ஐ.எஸ்.) ஐ.எஸ். 17021 தரநிலைக்கு உட்பட்டது என்று கூறியுள்ளன.
2026 செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனையின் மாதிரிகள் மாநில அளவிலான எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. மார்க்கெட்டிங் டிசிப்ளின் கைட்லைன்ஸ்-2024 (எம்.டி.ஜி.) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தரக் காரணிகளும் பரிசோதிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளன.
ஆனால், அக்டோபரில் நடத்தப்பட்ட சோதனையின் போது எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்காமல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது நிறுவனங்களின் எதிர்ப்பாகும்.
2005-ஆம் ஆண்டின் மோட்டார் ஸ்பிரிட் மற்றும் ஹை ஸ்பீட் டீசல் (விநியோகம், விற்பனை மற்றும் முறைகேடு தடுப்பு) கட்டுப்பாட்டு ஆணை மற்றும் 2024-ஆம் ஆண்டின் மார்க்கெட்டிங் டிசிப்ளின் வழிகாட்டுதல்களின்படி பெட்ரோல் மாதிரி சேகரிப்பு, பாதுகாப்பு, சோதனை மற்றும் முடிவுகளை வெளியிடுவதற்கு குறிப்பிட்ட விதிகள் உள்ளன என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கியுள்ளன.
இந்த விதிகளின்படி ஒவ்வொரு மாதிரி சேகரிக்கும் போதும் மொத்தம் 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 தனித்தனி 1 லிட்டர் மாதிரிகளைப் பெற வேண்டும்.
இரண்டு மாதிரிகளை பங்க் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டு மாதிரிகளை எண்ணெய் நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட துறை பாதுகாக்க வேண்டும். மீதமுள்ள இரண்டு மாதிரிகளை கட்டுப்பாட்டு ஆணையின் அட்டவணை-3ல் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
மாதிரிகள் மீதான லேபிள்களில் சம்பந்தப்பட்ட அனைவரின் கையொப்பமும் இருக்க வேண்டும். சோதனை முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றுவதால் சோதனையின் வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவுகளின் உறுதிப்பாடு சாத்தியமாகிறது என்று நிறுவனங்கள் கூறியுள்ளன. மறுபரிசீலனைக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
அக்டோபரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பாக பாதுகாக்கப்பட்ட மாதிரிகள், பெட்ரோல் பங்க் வாரியான முழுமையான விவரங்கள் மற்றும் ஆய்வக அறிக்கைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த ஆவணங்களை மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் மூலம் கோரியும் அவை கிடைக்கவில்லை. மேலும், அறிக்கையில் உள்ள எத்தனால் அளவை உறுதிப்படுத்த கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை நடத்தப்படவில்லை. மாறாக தனியார் மூன்றாம் தரப்பு அமைப்பின் ஆய்வகம் வழங்கியுள்ள சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளன.
அந்தச் சான்றிதழ்களில் எத்தனால் அளவை சுயாதீனமாக சரிபார்க்க தேவையான முழுமையான தொழில்நுட்பத் தகவல்களும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் பிரதிகளை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பங்க் உரிமையாளர்களுக்கு வழங்காததால் மறுபரிசீலனை செய்து முடிவுகளை சரிபார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பங்க் உரிமையாளர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க முடியாமல் போயுள்ளது என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எத்தனால் கலந்த எரிபொருள் கொள்கையின் கீழ் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவின் சில பங்குகளில் இந்த அளவை மீறி எத்தனால் கலக்கப்படுகிறது என்ற மாநில அரசின் குற்றச்சாட்டு தற்போது எண்ணெய் நிறுவனங்களின் எதிர்ப்போடு புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
ஒருபுறம் மாநில அரசு சோதனை அறிக்கைகளை முன்வைத்து நடவடிக்கைக்கு வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் எண்ணெய் நிறுவனங்கள் சோதனை முறையின் சட்டப்பூர்வ தன்மை மற்றும் தொழில்நுட்ப துல்லியத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளன. இதனால் மாதிரி சேகரிப்பு மற்றும் சோதனை நடைமுறை குறித்து இரு தரப்பிற்கும் இடையே தெளிவுபடுத்துதலும் ஆவணங்களை சரிபார்த்தலும் அவசியமாகியுள்ளது. பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக எத்தனால் கலந்தால் அது வாகன எஞ்சின்களை சேதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.