
பியோங்யாங், நவ. 8-
வடகொரியா, ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளுடன், அரசின் ஆதரவுடன் செயல்படும் ஹேக்கர் படை மூலம் சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஹேக்கிங் என்பது வெறும் சைபர் குற்றம் அல்ல; அது எங்கள் நாட்டின் அனைத்து நோக்கத்துக்குமான கூர்மையான வாள்” என்று அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். எனினும், சர்வதேச அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வடகொரிய அரசு ஏற்கவில்லை. அக்டோபர் இறுதியில், உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பினான்ஸ் அமைப்பில் ஊடுருவிய ஹேக்கர்கள், 20 நிமிடங்களில் 60 பில்லியன் டாலர்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலை நடத்தியவர் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்க எஃப்.பி.ஐ. மற்றும் டி.ஆர்.எம். லேப்ஸ், இதன் பின்னணியில் வடகொரியாவின் ‘டிரேடர் டிரெய்டர்’ அமைப்பு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளன. செயின் அனாலிசிஸ், எலிப்டிக் நிறுவனங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஹேக்கர் படையை உருவாக்கும் திட்டத்துக்கு வடகொரியா 1980-களிலேயே அடித்தளமிட்டது. 1995-ல் அதிபர் கிம் ஜாங் இல், ராணுவத்தின் கீழ் தனி சைபர் படையை உருவாக்க உத்தரவிட்டார். 1998-ல் நான்காம் வகுப்பு முதல் கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. 2000-களில் தென்கொரியாவை இலக்காகக் கொண்டு தொடங்கிய தாக்குதல்கள் பின்னர் உலக நாடுகளுக்கும் விரிவடைந்தன. 2017-ம் ஆண்டின் ‘வான்னாகிரை’ தாக்குதல் குறிப்பிடத்தக்கது.அறிவியல், கணிதத்தில் சிறந்து விளங்கும் 11 முதல் 12 வயது மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பியோங்யாங்கின் கும்சோங் பள்ளியில் பயிற்சி பெறுகின்றனர். பின்னர் மிரிம், மொரன்போங் கல்லூரிகள் மற்றும் கிம் இல் சுங், கிம் சேக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் சைபர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2024 நிலவரப்படி, சுமார் 8,400 சைபர் நிபுணர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. லாசரஸ், ப்ளூநார்ஃப், அன்டாரியல், கிம்சுகி, பீகில் பாய்ஸ் உள்ளிட்ட குழுக்கள் நிதித் திருட்டு, ராணுவ உளவு, உள்கட்டமைப்பு தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. திருடப்படும் பணத்தில் 40 சதவீதம் பேரழிவு ஆயுதத் திட்டங்களுக்கு செல்கிறது என ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், தாக்குதல்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை















