
புதுடில்லி, நவ. 11-
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும், அறிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் சவால்களே, இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக உள்ளதாக அமெரிக்க நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கு மிகப்பெரிய உள்நாட்டு சந்தை உள்ளது. மேலும், உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவான அரசுக் கொள்கைகளும் நடைமுறையில் உள்ளன. இந்தச் சாதகமான சூழல்கள் இருந்தபோதிலும், தென்கொரியாவைப் போல பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், அரசின் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தும் திறனை மேம்படுத்த வேண்டும்.
பாதுகாப்புத் துறையின் அனைத்து பிரிவுகளிலும் ஒரே அளவிலான முதலீட்டு வாய்ப்புகள் இருக்காது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட சில துறைகளிலேயே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ், ரேடார், சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் உற்பத்தித் துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தளவாடங்களுக்கான கொள்முதல் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றும், இத்துறையில் நிலவும் தொழில்நுட்ப இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் ஆதரவான கொள்கைகள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்தும் வேகம் மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவை பாதுகாப்பு உற்பத்தித் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருக்கும் என அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.













