Home செய்திகள் உலக செய்திகள் பயங்கரவாத ஆதரவு அரசு ஆபத்து: நெதன்யாகு

பயங்கரவாத ஆதரவு அரசு ஆபத்து: நெதன்யாகு

ஜெருசலேம், நவ. 11-
இஸ்ரேல் பார்லிமென்டுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நேற்று முதல் அமர்வு நடைபெற்றது. இதில் உரையாற்றிய தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசிய ஒற்றுமை கொண்ட அரசு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக எக்ஸ் தளத்திலும் நெதன்யாகு கடுமையாகப் பதிவிட்டிருந்தார்.
அதில், “இது வெட்கக்கேடானது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் ரா-அம், ஜாயிண்ட் லிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து ஓர் ஆபத்தான அரசை அமைப்பது முற்றிலும் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.நெதன்யாகுவின் இந்தப் பேச்சுக்கு, புதிதாக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் ஐசென்காட் எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நெதன்யாகுவின் பேச்சு பிளவுபடுத்தும், வெறுப்பு நிறைந்த பேச்சாக உள்ளது. அவரது இந்தப் பேச்சுக்காக அவர் வெட்கப்பட வேண்டும். இனி ஒரு நிமிடம் கூட பிரதமர் பதவியில் நீடிக்க நெதன்யாகு தகுதியற்றவர்” என்றார். இதற்கிடையே, ஐசென்காட்டின் யாஷர் கட்சி பார்லிமென்டில் சில முக்கிய முன்மொழிவுகளைத் தாக்கல் செய்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுத்த பாதுகாப்புத் தோல்விகள் குறித்து விசாரிக்க சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், நெதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்தங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்னாள் மூத்த ராணுவ அதிகாரியான கஹானாவை பார்லிமென்டின் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவுகளுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் யாஷர் கட்சி தெரிவித்துள்ளது.