Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்டா பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு

டெல்டா பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: நவ. 11-
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கான காப்பீடு செய்யும் கால அவகாசத்தை டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு, பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்காக, செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும், அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் டெல்டா பகுதிகளின் கடைமடை பகுதிகளுக்கு முறையாகச் சென்று சேரவில்லை.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாசனத் தேவை ஓரளவு பூர்த்தியாகி வருவதையடுத்து, விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பயிர்கள் பாதிக்கப்படும் நேரங்களில் விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையில், ஒன்றிய அரசின் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.540 வரை காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சம்பா மற்றும் தாளடி பயிர்களைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குறிப்பிட்ட காலத்துக்குள் காப்பீடு செய்து கொள்ள முடியும்.