Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.2.5 கோடி காருடன் பிஹார் எம்எல்ஏ மகள் திருமணம்

ரூ.2.5 கோடி காருடன் பிஹார் எம்எல்ஏ மகள் திருமணம்

பாட்னா: நவ. 11-
பிஹாரின் மொகமா தொகுதி எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் இளைய மகள் ஷிவாங்கி சிங்கின் திருமணம், மாப்பிள்ளைக்கு வழங்கப்பட உள்ள ரூ.2.5 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரால் பேசுபொருளாகியுள்ளது. திருமணம் வரும் நவம்பர் 25-ம் தேதி, மொகமா பகுதியில் உள்ள ஆனந்த் சிங்கின் பூர்வீக கிராமமான லாட்மாவில் நடைபெற உள்ளது.
குற்றவியல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆனந்த் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை வழக்கிலும் அவர் சிறையில் இருந்துள்ளார்.
ஒருமுறை சிறையில் இருந்தபடியே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அவரது மனைவி நீலம் தேவியும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக உள்ளார்.
ஷிவாங்கி சிங்கை திருமணம் செய்ய உள்ள ரிஷிகேஷ் குமார் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா மாகாணப் பல்கலைக்கழகத்தில் அவர் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். அவரது தந்தை ரன்விஜய் குமார் சிங், மத்திய ரிசர்வ் காவல் படையில் கமாண்டன்ட்டாக பணியாற்றுகிறார்.
திருமணத்துக்காக சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. விருந்தினர்களுக்காக சுமார் 150 வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. விழாவில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிகழ்வில் ஆனந்த் சிங்கின் இளைய மகன் அபினவ் சிங்கின் உபநயனச் சடங்கும் நடைபெறுகிறது. அவருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குதிரை வளர்ப்பில் ஆர்வமுள்ள ஆனந்த் சிங், திருமணத்தை முன்னிட்டு தேசிய அளவிலான குதிரைப் பந்தயத்தையும் அறிவித்துள்ளார்.வெற்றியாளர்களுக்கு தார் ஜீப் பரிசாக வழங்கப்பட உள்ளது.