Home மாவட்டங்கள் சென்னை 51 தொகுதிகளில் வாக்கு கணக்கில் முரண்பாடு

51 தொகுதிகளில் வாக்கு கணக்கில் முரண்பாடு

சென்னை: நவ. 11-
2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளுக்கும், வாக்கு எண்ணும் இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக, தேர்தல் ஆணையத்தின் உள்ஆவணங்களை அடிப்படையாகக்
கொண்டு ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ நடத்திய தேர்தல் தணிக்கை ஆய்வு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள 530 தொகுதிகளின் 4,212 அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 51 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. வாக்குப்பதிவு முடிவில், வாக்காளர் பதிவேடான படிவம் 17A-வில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கையும், இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளும் ஒன்றாக இருக்க வேண்டும்.
51 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை ‘0’ எனப் பதிவாகியிருந்ததாகவும் அல்லது குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இவற்றில் 10 தொகுதிகள் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் உள்ளன. அந்த 10 தொகுதிகளில் 7 இடங்களில் பாஜக அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
மீதமுள்ள 32 தொகுதிகளில் பதிவான மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பட்கல் தொகுதியில் 3.32 லட்சம் வாக்குகள் பதிவானதாக ஆவணங்கள் காட்டும் நிலையில், இயந்திரத்தில் 1.60 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. 1.72 லட்சம் வாக்குகள் கணக்கில் வராத நிலையில், பாஜக வேட்பாளர் 6,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல் வெற்றி பெற்ற நிலையில், 18.11 லட்சம் வாக்குகள் பதிவானதாகக் காட்டப்பட்டும், 10.33 லட்சம் வாக்குகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. கைத்தல் தொகுதியில் 215 பேர் வாக்களித்ததாகக் கூறப்பட்டும், 1,67,285 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் பதிவான 6,66,046 வாக்குகளுக்கு பதிலாக 6,72,942 வாக்குகள் எண்ணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.