
போபால்: நவ. 11-
மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டம் சித்திரகூட் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய கழுதை சந்தையில், பாலிவுட் நடிகர்களின் பெயர் சூட்டப்பட்ட கழுதைகள் இந்த ஆண்டும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
தீபாவளி முடிந்தவுடன் மந்தாகினி ஆற்றங்கரையில் நடத்தப்படும் இந்த சந்தை, வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது.
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தச் சந்தை செயல்பட்டு வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
அந்தக் காலத்தில் ராணுவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.காலப்போக்கில், தீபாவளியை ஒட்டி இந்தச் சந்தை நடத்தும் பாரம்பரியம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கழுதை சந்தை சித்திரகூட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தங்கள் கழுதைகளுடன் சந்தைக்கு வந்தனர். அவற்றை வாங்குவதற்காக அதிகாலை முதலே சந்தையில் பெரும் கூட்டம் திரண்டது.
சந்தையில் கழுதைகளின் உடல் தோற்றம் மற்றும் விலையைவிட, அவற்றுக்கு சூட்டப்பட்டிருந்த பெயர்களே பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. வியாபாரிகள் தங்கள் கழுதைகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர்களின் பெயர்களை வைத்திருந்தனர்.
கழுதைகளின் விலை, அவற்றின் இனம், உயரம், உடல் அமைப்பு, நீளம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு அமிதாப் பச்சன், ஷாருக் கான், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் பெயர்களைக் கொண்ட கழுதைகள் தலா ரூ.50,000-க்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
ஆனால், சங்கி பாண்டே பெயர் சூட்டப்பட்ட கருப்பு நிறக் கழுதைக்கு கடும் போட்டியுடன் ஏலம் நடைபெற்றது. இறுதியில் அது ரூ.72,000-க்கு விற்பனையானது. இதன் மூலம், அதிக விலைக்கு விற்பனையான கழுதையாக சங்கி பாண்டே பெயர் கொண்ட கழுதை முதலிடம் பெற்றது.













