Home செய்திகள் தேசிய செய்திகள் அசாமில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன

அசாமில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன

கவுகாத்தி: நவ.11-
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சித்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மிசோரம் மாநிலம் சைராங் நோக்கி சென்றுகொண்டிருந்த கொல்கத்தா–சைராங் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் அசாமில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த ரெயில் இன்று காலை சுமார் 7 மணியளவில் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள டிகாரு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரெயிலை நிறுத்த முயன்றபோது, லோகோ பைலட்டின் கட்டுப்பாட்டை ரெயில் இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து என்ஜின் உட்பட 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். எனினும், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக மாற்று ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.