
சென்னை: நவ. 11-
தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் மற்றும் ஆளும் தவெக கட்சியினர் மீது அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்சி எம்எல்ஏ.க்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையன்று ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய், உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், உள்துறை செயலர் ஏ.கார்த்திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க், சென்னை ஆணையர் அமல்ராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் விஜய் தலைமையில் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
சமீப காலமாக நடைபெற்ற கொலை உட்பட குற்ற சம்பவங்கள், அவற்றின் மீதான விசாரணையின் முன்னேற்றம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகக் காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு காவல் துறையினர் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டால், அவற்றின் மீது எவ்வித தாமதமுமின்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டதாகவும் அலட்சியமாகப் பணியாற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் தனது பகுதியில் ஒரு வாரமாகக் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை எனவும், குப்பைகள் அகற்றப்படவில்லை எனவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான ரவிசங்கரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது, கார்த்திக் குமாரை ரவிசங்கர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி விரட்டியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திடீரென, “பேரவைதுணைத் தலைவர் தன்னைத் தாக்கவில்லை” என்று கார்த்திக் குமார் பேசுவது போன்ற மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. பின்னர், “தனது உயிருக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி அந்த வீடியோவில் அவ்வாறு பேசினேன்” என்று கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், “மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி தன்னை வலுக்கட்டாயமாக ரவிசங்கர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ரவிசங்கரும் காவல் ஆய்வாளரும் இணைந்து தன்னை மிரட்டினர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்கே சென்று பிரச்சினை செய்ததாகவும், இதன் காரணமாக ஆட்சியர் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த 2 விவகாரங்களும் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளன.














