
பெங்களூரு, நவ. 11-
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஒரு சொகுசு வில்லாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனுமதியின்றி நீச்சல் குள விருந்து நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, யமலூர் கரியம்மன அக்ரஹாரா சாலையில் உள்ள அந்த வில்லாவில் கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவு சிசிபி போலீசார் திடீர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மதுவிருந்துடன், சட்டவிரோதமாக ஹுக்கா மற்றும் எம்பிஎம்ஏ போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த விருந்தை அமைத்து நடத்திய அரிஹந்த் பாண்டே, அபினவ் பாண்டே மற்றும் பார்த்தா ஆகிய 3 பேரை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
இந்த விருந்தில் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஆட்டம் பாட்டத்துடன் களித்திருந்தது தெரியவந்தது.
போலீசார் சோதனை நடத்தியபோது அங்கிருந்த மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து தடம் அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனை முடிவில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆப் மூலமாக அழைப்பு:
போலீசாரின் விசாரணையில், அமைப்பாளர்கள் பல்வேறு செல்போன் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த நீச்சல் குள விருந்துக்கு ஆட்களை சேர்த்தது தெரியவந்தது. பெண்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாலிபர்களை வலையில் வீசியுள்ளனர்.
இந்த விருந்தில் பங்கேற்க இளைஞர்களுக்கு ரூ.1,710, பெண்களுக்கு ரூ.1,080, மற்றும் ஜோடிகளுக்கு ரூ.2,400 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அங்கு விநியோகிக்கப்பட்ட மது மற்றும் போதைப்பொருட்களுக்கு தனியாக பணம் பெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் சிசிபி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













