
குமுளி: நவ. 15- சபரிமலையில் மண்டல கால வழிபாடு நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (திங்கள்கிழமை) மாலை நடை திறக்கப்பட உள்ளது. 41 நாள் நடைபெறும் இந்தத் தொடர் வழிபாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இடுக்கி, பத்தினம்திட்டா மாவட்டங்களில் சபரிமலைக்குச் செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் 6 மொழிகளில் விலைப்பட்டியல் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டு வசதி வழங்கப்படுவதால், தரிசன முன்பதிவின்போதே வாரிசுதாரர் மற்றும் அவர்களுடனான உறவுமுறை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலைக்கான வனப்பாதைகள் மண்டல, மகர விளக்கு வழிபாட்டுக் காலங்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. இதையொட்டி அந்தப் பாதைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளன. அழுதகடவு நுழைவுப் பாதையில் காலை 7 மணிக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள், பிற்பகல் 2.30 மணிக்குள் முக்குழியைச் சென்றடைய வேண்டும். அங்கிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்குள் பம்பையை அடைய வேண்டும். சத்திரம் வனப்பாதையில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பக்தர்கள் செல்ல நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வனப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்நிதானம் அருகே உள்ள பெரிய நடைப்பந்தல் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பம்பை, சந்நிதானம் ஆகிய இடங்களில் 24 மணி நேர மருத்துவ சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனப்பாதையில் 22 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிபிஆர் முதலுதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்டல கால வழிபாடு தொடங்குவதையொட்டி சந்நிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.













