Home மாவட்டங்கள் பெங்களூர் பால் வாங்கச் சென்ற 9 வயது சிறுமி மீது பைக் மோதி விபத்து

பால் வாங்கச் சென்ற 9 வயது சிறுமி மீது பைக் மோதி விபத்து

பெங்களூரு, நவ. 15-
பால் வாங்க கடைக்குச் சென்ற 9 வயது சிறுமி மீது வேகமாக வந்த பைக் மோதியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் நகரின் ஹெசரகட்டா அருகே நடந்துள்ளது.
நான்காம் வகுப்பு படித்து வரும் மதுமிதா என்ற சிறுமியே விபத்தில் காயமடைந்தவர் ஆவார். தாய் மஞ்சுஸ்ரீயுடன் வசித்து வந்த மதுமிதா, வழக்கம்போல காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
கடையில் பால் வாங்கிக்கொண்டு கையில் பிடித்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமி மீது பயங்கரமாக மோதியது. பைக் மோதிய வேகத்தில் சிறுமி சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தார். இந்த விபத்து குறித்த முழு காட்சிகளும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் சிறுமி மதுமிதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிக்கபானவரா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.