Home செய்திகள் உலக செய்திகள் நெதன்யாகுவை சந்தித்த முன்னாள் பிரதமர் பென்னட்

நெதன்யாகுவை சந்தித்த முன்னாள் பிரதமர் பென்னட்

டெல் அவிவ்: நவ. 19-
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை திடீரென சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேசியது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அவரது கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன. முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் காடி ஐசன்கோட்டின் கட்சி 21 இடங்களிலும், அவரது கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.இரு கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை இல்லாததால், 19 இடங்களைப் பெற்ற அரபுக் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை தற்போது காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவளித்து வருவதால், அவர் அடுத்த பிரதமராகும் சூழல் உருவாகியுள்ளது. , பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் நெதன்யாகு, ஒற்றுமை ஆட்சி அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்.
நெதன்யாகுவும் பென்னட்டும் அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ளனர்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பென்னட், முன்னாள் பிரதமர் யாயிர் லாபிட் தலைமையிலான ‘யேஷ் அதித்’ கட்சியுடன் ‘டுகெதர்’ கூட்டணியில் போட்டியிட்டார். அந்தக் கூட்டணி 12 இடங்களை வென்றுள்ளது.அந்த 12 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், நெதன்யாகு கூட்டணியின் பலம் 65 ஆக உயரும். எனினும், சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் வெளியாகவில்லை. இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.