
இட்டாவா: நவ. 19-
உத்தரப் பிரதேசத்தில் உறவினர்களை வழியனுப்புவதற்காக வந்த 12 பேர், வந்தே பாரத் விரைவு ரயிலில் 140 கிலோ மீட்டர் பயணம் செய்ததால், ரயில்வே நிர்வாகம் அவர்களுக்கு மொத்தம் ரூ.36,000 அபராதம் விதித்தது.வாராணசி–புதுடெல்லி வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 22415) ஞாயிற்றுக்கிழமை காலை கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தது. கான்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், அந்த ரயிலில் பயணம் செய்யவிருந்த தங்களது குடும்பத்தினரின் உடைமைகளை இருக்கைகளில் வைத்துவிட்டு, அவர்களை அமர வைப்பதற்காக ரயிலுக்குள் ஏறினர்.
அவர்கள் ரயிலுக்குள் இருந்தபோதே, புறப்படும் நேரம் நெருங்கியதால் தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டன. அடுத்த ரயில் நிலையம் வரும் வரை கதவுகள் திறக்காது என்பதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேரும் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டனர்.
ரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்த நடைமேடையில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிக்கியவர்கள் கதவுகளைத் திறக்குமாறு ரயில்வே ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஓடும் ரயிலில் பாதுகாப்பு விதிகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாக கதவுகளைத் திறக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து துண்ட்லா ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் உத்தரவின்பேரில், கான்பூரிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இட்டாவா சந்திப்பில் காலை 10.49 மணியளவில் ரயில் நிறுத்தப்பட்டது.
அங்கு தயாராக இருந்த நிலைய கண்காணிப்பாளர் பி.எம். மீனா, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் தினேஷ் குமார் சிங், ரயில்வே காவல் துறை ஆய்வாளர் யதுவீர் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் 12 பேரையும் பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவர்கள் ஆர்.பி.எஃப். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.முறையான பயணச்சீட்டு அல்லது அனுமதியின்றி ரயிலில் ஏறியதற்காக, நபர் ஒருவருக்கு ரூ.3,000 வீதம் மொத்தம் ரூ.36,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இனி இதுபோல் அனுமதியின்றி ரயிலில் ஏறக் கூடாது என எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.














