
உத்தராகண்ட்: நவ. 19-
உத்தராகண்டில் உள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய இந்து வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வகையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரம்மகால்–யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்தப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். 2023-ம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 17 நாட்கள் கழித்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை மையமாகக் கொண்டு ‘டன்னல் மேன்’ என்ற வெப் தொடர் உருவாகிறது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தத் தொடரில், ‘தி ரயில்வே மேன்’ வெப் தொடரை இயக்கிய சிவ் ராவைல் ஷோ ரன்னராக செயல்படுகிறார். அம்பிகா பண்டிட் மற்றும் மனன் ராவத் ஆகியோர் தொடரை இயக்குகின்றனர்.
நெட்பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இந்தத் தொடரில் மாதவன், சந்தீப் கிஷன், மகேஷ் மஞ்சரேக்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், நடிகை தபுவும் தொடரில் இணைந்துள்ளார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் தபு முதன்முறையாக வெப் தொடரில் நடிக்கிறார்.














