
பெங்களூரு, நவ. 20–
பெங்களூரு கே.ஆர்.புரம் மற்றும் சிக்கஜாலா அருகே நேற்று இரவு நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில், ஜாலி ரைடு சென்ற வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.கே.ஆர்.புரம் மேடஹள்ளி அருகே நள்ளிரவு 1.45 மணி அளவில் அதிவேகமாகச் சென்ற கார் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யஷஸ் (வயது 21) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட பாதிப்பால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மற்ற 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த யஷஸ் உள்பட 3 பேரும் அல்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் காரில் ஜாலி ரைடு சென்றபோது இந்த விபத்து நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மற்றொரு சம்பவம் சிக்கஜாலா சாத்தனூர் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் நடந்தது. அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் யஷ்வந்த் ரெட்டி (வயது 19) படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த யஷ்வந்த் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பெங்களூருவில் உள்ள ரேவா கல்லூரியில் படித்து வந்தார். . இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















