Home செய்திகள் தேசிய செய்திகள் மராட்டியத்தில் வார வேலை நேரம் 48 மணி

மராட்டியத்தில் வார வேலை நேரம் 48 மணி

மராட்டியம், நவ. 20-
மராட்டிய மாநிலத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை வாரத்திற்கு 48 மணி நேரமாக வரையறுத்தும், ஊதியக் கணக்கீடு, வாராந்திர ஓய்வு, கூடுதல் நேரப் பணிக்கான ஊதியம் ஆகியவற்றுக்கு சீரான விதிகளை வகுத்தும் மாநில அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை மந்திரி ஆகாஷ் பண்ட்கர் கூறியதாவது: ஊதிய சட்டம், 2019-ன் கீழ் வரும் தொழிலாளர்களின் ஊதியப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ‘மராட்டிய ஊதிய விதிகள், 2026’ கடந்த 5-ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிகள், 1963-ம் ஆண்டின் பழைய குறைந்தபட்ச ஊதிய விதிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், மாநில அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்துக்கு இவை பொருந்தாது. புதிய விதிகளின்படி, தினக்கூலி பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேலை நேரம் 8 மணி நேரமாகும். பிற ஊதியப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களின் வேலை நேரம் வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் நிறுவனங்கள் வாராந்திர ஓய்வு நாளை வழங்க வேண்டும். அந்த நாளில் தொழிலாளர் பணிபுரிந்தால், அவருக்கு மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். வாராந்திர ஓய்வு நாளில் பணிபுரிவதற்கான கூடுதல் நேர ஊதியம், வழக்கமான ஊதிய விகிதத்தைவிட குறைந்தபட்சம் 2 மடங்கு இருக்க வேண்டும். ஒரே ஊதியக் காலத்தில் தொழிலாளியின் சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் நிறுவனங்கள் பிடித்தம் செய்யக்கூடாது. அபராதம் அல்லது இழப்பீடு என்ற பெயரில் பிடித்தம் செய்வதற்கு முன்பு, தொழிலாளியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். மேலும், தொழிலாளர் பதிவேடுகள், ஊதியம், கூடுதல் நேரப் பணி மற்றும் வருகைப் பதிவேடுகளை நிறுவனங்கள் 5 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். சம்பளம் வழங்கும் நாளன்றோ அல்லது அதற்கு முன்போ தொழிலாளர்களுக்கு ஊதிய ரசீது வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.