
புதுடில்லி, நவ. 20-
பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டில்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் குற்றவாளி கும்பல்களை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகள், இந்தியாவில் உள்ள தங்களது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களையும், எல்லை தாண்டிய கடத்தல்களையும் இயக்கி வருகின்றனர். எனவே, அவர்களைக் கண்டறிந்து, நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. மாநில எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க, மாநில போலீசாரும் மத்திய விசாரணை அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது சிறந்த உதாரணமாகும். ஜம்மு–காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக காஷ்மீர் தற்போது மாறியுள்ளது. இது ஒரு முக்கியமான மைல்கல். இந்த நடவடிக்கைக்காகப் பாதுகாப்புப் படையினருக்கும், உளவுத் துறையினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமித் ஷா கூறினார்.














