Home விளையாட்டு கே எல் ராகுல் பிரம்மாண்ட செஞ்சுரி சாதனை

கே எல் ராகுல் பிரம்மாண்ட செஞ்சுரி சாதனை

வெலிங்டன், நவ. 21- நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் சதம் விளாசி பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ளார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 368 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அடுத்து இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் கே எல் ராகுல் அரைசதம் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார். இந்த சதத்தின் மூலம் ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 வெளிநாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி வரிசையில் 8வது ஆசிய வீரராக ராகுல் இணைந்தார். இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இந்த 4 நாடுகளிலும் சதம் விளாசியவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சயீத் அன்வருக்கு அடுத்தபடியாக 2வது வீரராக இணைந்து இமாலய சாதனையை ராகுல் படைத்துள்ளார். மேலும் இந்திய அளவில் தொடக்க வீரராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முரளி விஜய்யின் 12 சதங்கள் சாதனையை ராகுல் சமன் செய்தார். சுனில் கவாஸ்கர் 33 சதங்களுடனும், வீரேந்தர் சேவாக் 22 சதங்களுடனும் முதல் 2 இடங்களில் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் தலா 9 சதங்கள் அடித்துள்ளனர். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தொடக்க வீரராக ராகுல் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். 100 ரன்கள் அடித்ததும் தனது வழக்கமான பாணியில் ஹெல்மெட்டை கழற்றி சதத்தை தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் ராகுல் கொண்டாடினார். பெவிலியனில் இருந்த ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். தொடக்கத்தில் மேட் ஹென்றி பந்தில் எல்.பி.டபுள்யூ வாய்ப்பில் தப்பிய கே எல் ராகுல், பின்னர் சதம் அடித்து பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.