
புதுடெல்லி, நவ. 23-
காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீர் திறப்பது குறித்த முடிவை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் மட்டுமே எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரில் பற்றாக்குறையாக உள்ள 11 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அந்த வழக்கின் விரிவான தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காவிரி இறுதித் தீர்ப்பை செயல்படுத்துமாறு கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டன. இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர்ப் பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இந்த இரு அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நீர் திறப்பதற்கான அட்டவணையை கண்காணித்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் இந்த அமைப்புகளிடமே உள்ளது. நிபுணர்கள் அடங்கிய இந்த அமைப்புகள், காவிரி நீர் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுத்து செயல்படுத்தி வரும் நிலையில், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது பொருத்தமாக இருக்காது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை காலங்களில் நீரைப் பகிர்வது தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமுமே முடிவு செய்ய வேண்டும். அதற்காகத்தான் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.













