
சென்னை: நவ. 23-
சென்னை புரசைவாக்கத்தில் குழந்தைகள் இல்லாமல் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதி உயிரிழந்த நிலையில், அவர்களது சடலங்கள் சுமார் 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புரசைவாக்கம் சரவண பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (78). இவரது மனைவி சந்திரா (72). குழந்தைகள் இல்லாத இவர்கள் இருவரும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். தன்ராஜ், தனது வீட்டிலேயே சிறிய அளவில் நகைப் பட்டறை நடத்தி வந்தார். வயது மூப்பு காரணமாக முன்புபோல் வேலை செய்ய முடியாததால், அண்மையில் அந்தப் பட்டறையை மூடியுள்ளார்.
இதற்கிடையே, சந்திராவின் நகைகளை விற்று கிடைத்த பணத்தை வங்கியில் செலுத்தி, அதன்மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருவரும் வாழ்க்கை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக வீட்டில் சமைக்க முடியாத நிலையில், ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்களது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஒரே படுக்கையில் தன்ராஜும் சந்திராவும் சடலமாகக் கிடந்தனர்.இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன. போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சந்திராவே செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தன்ராஜ் உயிரிழந்ததை அறியாமல், அவரது உடலுடன் சந்திரா சுமார் 5 நாட்கள் ஒரே படுக்கையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.













