
புதுடெல்லி: நவ. 23-
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்துத்துவப் பாதையை நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை 1990-ல் நடத்திய ‘ராம் ரத யாத்திரை’ இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த யாத்திரையின் தாக்கத்தால் பாஜக மத்தியில் முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியது. உத்தரப் பிரதேசத்திலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேர்தல் காலங்களில் இந்துத்துவ அரசியல் தவிர்க்க முடியாததாக மாறியது. இந்தப் போக்கு தற்போது எதிர்க்கட்சிகளிடமும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான எட்டாவாவில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேதார்நாத் வடிவிலான கோயிலை கட்டி வருகிறார். மேலும், முதல்முறையாக டிசம்பர் 12-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவும் கோயில்களுக்குச் செல்வதைத் தவறவிடுவதில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மதமும் கோயில்களும் தங்களது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதாகத் தொடர்ந்து வலியுுத்தி வருகின்றனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர், மதத்தின் மீது எந்த அரசியல் கட்சிக்கும் ஏகபோக உரிமை இல்லை என வாதிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் திகா நகரில் ஜெகந்நாதர் கோயில் கட்டும் முயற்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் இந்துத்துவத்தை நோக்கிச் செல்வதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளை பாஜக தொடர்ந்து ‘இந்து எதிர்ப்பாளர்கள்’ எனக் குற்றம் சாட்டி வருவதால், அந்தப் பிம்பத்தை மாற்றவே கோயில்களுடன் தங்களை இணைத்துக்கொள்ள அவை முயல்வதாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை பாஜக, ‘தேர்தல் கால இந்துத்துவம்’ என விமர்சிக்கிறது.














