Home மாவட்டங்கள் சென்னை திண்டிவனம் அருகே பஸ் மோதி 2 பேர் பலி

திண்டிவனம் அருகே பஸ் மோதி 2 பேர் பலி

விழுப்புரம்: நவ. 23-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், வேன் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 13 பேர் பலத்த காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குழுவினர் ஒரு வேனில் பயணம் மேற்கொண்டிருந்தனர். திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அந்த வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த மோதலின் வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவரும், பக்தர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த மேலும் 13 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்களும், நெடுஞ்சாலை ரோந்துப் போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்த 13 பேரையும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.