Home செய்திகள் தேசிய செய்திகள் 2,500 அக்னிவீரர் தரவுகளை விற்க முயன்ற 14 வயது சிறுவன்

2,500 அக்னிவீரர் தரவுகளை விற்க முயன்ற 14 வயது சிறுவன்

புதுடெல்லி, நவ. 23-
நான்கு ஆண்டுகால ராணுவப் பணிக்கான அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்துள்ள வீரர்கள், பணிக்காலம் முடிந்த பிறகு அரசின் பிற துறைகளில் சேருவதற்காகத் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்து வைக்கும் வகையில் தனி இணையதளம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த இணையதளத்தில் இருந்து 2,500 அக்னிவீரர்களின் விவரங்கள் திருடப்பட்டு, அவற்றை “டார்க் வெப்”பில் விற்பனை செய்வதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்டதாகக் கூறப்படும் அந்தத் தரவுகள் அனைத்தும் 500 டாலருக்கு, அதாவது சுமார் ரூ.50 ஆயிரத்துக்கு வழங்கப்படும் என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசின் புலனாய்வு ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசார் செயல்பாடுகள் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது.விசாரணையில், “டார்க் வெப்”பில் அந்த விளம்பரத்தை வெளியிட்டது அரியானா மாநிலம் பல்லப்காரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அந்தச் சிறுவன் இணையதளத்தை “ஹேக்” செய்து தகவல்களை அணுகியதாகத் தெரிகிறது. அவனிடம் இருந்த டிஜிட்டல் சாதனங்களில் இருந்து போலீசார் சில தரவுகளை மீட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் அந்தத் தரவுகள் உண்மையானவையா என்பதை போலீசார் தற்போது சரிபார்த்து வருகின்றனர். தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக அக்னிவீரர்களின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை வழங்குமாறு கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சிறுவன் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். அவரையும், அவரது பெற்றோரையும் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.