Home தலைப்பு செய்தி 1 கோடி தடுப்பூசி சாதனை

1 கோடி தடுப்பூசி சாதனை

புதுடெல்லி, நவ. 23-
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி இயக்கம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘நோய் வருவதற்கு முன்பே தடுக்கும் சுகாதார சேவை’ துறையில் இது முக்கியமான சாதனையாகும். போடப்படும் ஒவ்வொரு தடுப்பூசியும் சிறுமிகளை கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்குவதற்கும் எடுத்து வைக்கப்படும் அடியாகும் என்று மோடி சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியச் சாதனைக்குக் காரணமான சுகாதாரப் பணியாளர்கள், டாக்டர்கள், மாநில அரசுகள், நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
2026-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய எச்.பி.வி. தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். 14 வயது சிறுமிகளுக்கு அரசு சுகாதார மையங்களில் இலவசமாகவும், தாமாக முன்வந்தும் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி போடுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, இந்த ஆண்டு தடுப்பூசி போடுவதற்காக அடையாளம் காணப்பட்ட சுமார் 1.2 கோடி சிறுமிகளில் 87 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் கீழ் பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அரசு சுகாதார மையங்களில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையில் தடுப்பூசி போடப்படுகிறது.
ஆறு மாநிலங்களில் 100 சதவீத சாதனை
இந்தத் தடுப்பூசி இயக்கத்தில் குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரபிரதேசம், மிசோரம், மத்தியபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் தங்களது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகைக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளன.
12 மாநிலங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தை எட்டியுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடுவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது; அங்கு 29.33 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பீகாரில் 13.70 லட்சம் பேருக்கும், குஜராத்தில் 7.75 லட்சம் சிறுமிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார மையங்கள் மூலம் தடுப்பூசி வினியோகம், ஆஷா பணியாளர்கள், ஏ.என்.எம். பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.
மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி.) தொற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாகும். இந்த வைரஸில் பல வகைகள் உள்ள நிலையில், சில அதிக ஆபத்துள்ள வகைகள் நீண்டகாலத் தொற்றுக்குக் காரணமாகி புற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளுக்கு எச்.பி.வி. தொற்றே காரணமாகும். தொற்று ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம். பெரும்பாலான தொற்றுகள் இயற்கையாகவே குணமாகிவிடும். ஆனால் சில ஆபத்தான வகைகளின் தொற்று நீண்டகாலம் நீடித்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்.
தடுப்பூசி போடுவதன் மூலம் புற்றுநோய்க்குக் காரணமான முக்கிய எச்.பி.வி. வகைகளின் தொற்று அபாயத்தைக் குறைக்க முடியும். சிறுமிகளுக்கு 14-வது வயதிலேயே தடுப்பூசி போடுவதன் மூலம் எதிர்காலத்தில் தொற்று ஏற்படும் வாய்ப்புக்கு முன்பே பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தேசிய இயக்கத்தில் பயன்படுத்தப்படும் கார்டாசில்-4 தடுப்பூசியானது எச்.பி.வி.-யின் நான்கு வகைகளான 6, 11, 16 மற்றும் 18 ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
இவற்றில் 16 மற்றும் 18-வது வகைகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குக் காரணமான முக்கிய ஆபத்தான வகைகளாகும். 6 மற்றும் 11-வது வகைகள் பெரும்பாலும் பிறப்புறுப்பு மருக்களுக்குக் காரணமாகின்றன.
உலகம் முழுவதும் ஏற்கனவே 80 கோடிக்கும் அதிகமான எச்.பி.வி. தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. சுமார் இரண்டு தசாப்த கால அறிவியல் ஆய்வுகள் இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்குச் சான்றாக உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பாதுகாப்பிற்கு சிறப்பு கண்காணிப்பு
தடுப்பூசி போடும் போது சிறுமிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அரசு சுகாதார மையங்களில் பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட்ட பிறகு அரிதாகத் தோன்றக்கூடிய பக்கவிளைவுகளை (ஏ.இ.எஃப்.ஐ.) கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் சுகாதார மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் பக்கவிளைவுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி வழங்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.