
சென்னை: நவ. 24-
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், அந்தத் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது முறையாகப் புகார் அளித்திருப்பது உறுதியாகியுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று பச்சைப் பொய் சொல்லி வந்த இந்தக் கையாலாகாத ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசியுள்ளது இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், ஒரு மாதத்துக்கு முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே அரசு நேற்று தெரிவித்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்தது முதலமைச்சருக்குத் தெரியாதா? அதைத் தலைமைச் செயலாளர் முதலமைச்சரிடம் மறைத்தாரா? அல்லது புகார் தெரிந்திருந்தும் எம்.எல்.ஏ.வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். புகார் குறித்த தகவல் மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு ஆதரவாக நிற்காமல் குற்றத்தை மறைத்து, குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கத் துணைபோனதாகக் கூறப்படும் தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர் மற்றும் முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் புகார் குறித்து நியாயமான விசாரணை நடைபெறும் என்றும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை தாமதமின்றி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.













