Home செய்திகள் தேசிய செய்திகள் பஞ்சாபில் பாஜக–அகாலிதளம் மீண்டும் கூட்டணி

பஞ்சாபில் பாஜக–அகாலிதளம் மீண்டும் கூட்டணி

புதுடெல்லி: நவ. 25-
பஞ்சாபில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவும் சிரோமணி அகாலிதளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் சிரோமணி அகாலிதளமும் பாஜகவும் கடந்த 1996-ம் ஆண்டு கூட்டணி அமைத்தன. இரு கட்சிகளும் இணைந்து 1997, 2007, 2012-ம் ஆண்டுகளில் பஞ்சாபில் கூட்டணி ஆட்சியை நடத்தின. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் அகாலிதளம் இடம்பெற்றிருந்தது.
அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர், 2014-ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி 2020-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அவர் பதவி விலகினார். இதையடுத்து இரு கட்சிகளின் 24 ஆண்டுகால கூட்டணி முறிந்தது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது அமித் ஷா கூறியதாவது: பாஜக கூட்டணியில் அகாலிதளம் நீண்ட காலம் இடம்பெற்றிருந்தது. சந்தர்ப்ப சூழல் காரணமாக கூட்டணி உடைந்தது. தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம்.
போதைப் பொருளை ஒழிப்போம் என்ற வாக்குறுதியுடன் 2017-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதே வாக்குறுதியுடன் 2022-ம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இரு கட்சிகளின் ஆட்சியிலும் போதைப் பொருள் புழக்கம் ஒழிக்கப்படவில்லை.வரும் தேர்தலில் பாஜக–அகாலிதளம் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் 2029-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் போதைப் பொருள் இல்லாத பஞ்சாப் உருவாக்கப்படும்; சட்டம், ஒழுங்கு சீர்படுத்தப்படும். கூட்டணி வெற்றி பெற்றால் சுக்பீர் சிங் பாதல் முதல்வராகப் பதவியேற்பார் என்றார்.
வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.